தலச்சிறப்பு |
சோழ மன்னர்கள் காலத்தில் இப்பகுதி 'கிள்ளியநல்லூர்' என்று இருந்ததாகக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது 'கிளியன்னவூர்' என்று இருந்ததாக தமது பதிகத்தில் பாடியுள்ளார். தற்போது மருவி 'கிளியனூர்' என்று அழைக்கப்படுகிறது. அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் இத்தலத்து மூலவர் 'அகஸ்தீஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார்.
மூலவர் 'அகஸ்தீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், சற்று உயர்ந்த பாணத்துடன், லிங்க வடிவில் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். அம்பாள் 'அகிலாண்டேஸ்வரி' என்னும் திருநாமத்துடன் கிழக்கு நோக்கி தரிசனம் தருகின்றாள். இங்கு சுவாமியும், அம்பிகையும் எதிரெதிர் திசையில் காட்சியளிக்கின்றனர்.
கோஷ்டத்தில் பிட்ஷாடணர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் மஹா கணபதி, நால்வர், மகாலட்சுமி, வள்ளி, தேவசேனா சமேத ஆறுமுக சுவாமி, நவக்கிரகங்கள், குரோதன பைரவர், கால பைரவர், சூரியன், சந்திரன், ஜேஸ்டா தேவி முதலானோர் தரிசனம் தருகின்றனர்.
அகத்தியர், சுகப்பிரம்ம ரிஷி, காலவ மகரிஷி ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|